Sunday, November 06, 2005
ங்கொக்காமக்கா!
வீக்கெண்டுன்னு ஒண்ணு இருக்கிறதே நெனப்பில்லாம மூணு வாரமா டப்பா டான்ஸு ஆடிட்டு, ஜடன்லி இந்த வாரக்கடேசி கொஞ்சம் ஜிலோன்னு இருக்கலாம்போல தெரிஞ்சுது. அப்பாலிக்கா பாத்தா எல்லாம் பிரம. வெள்ளிக்கெழம ராத்திரி டிமாண்டே இல்லாத ஆன் டிமாண்டு ஹெச்பிஓல மேட்ரிக்ஸ் மூணாவது பாடாவதி (ஜாரி, பகுதி) பாத்துட்டு நாலு மணிக்கு கட்டய சாச்சா, மூதேவி எட்டு மணிக்கெல்லாம் போனப் போட்டு, குடிமுழுகிப்போச்சுன்னான். ஆகாககாகா! என்னாடா ராசா சேதின்னு கேட்டா ஒரு கஸ்டமருக்கு ஆர்டரு எடுக்க முடியல்லியாம், அடங்கொக்காமக்கா!
பரமார்த்த குரு கத மாதிரி ஒரு ஆர்டரு சரி பண்ண ஒம்பதாயிரம் பேரு. பல்லு வெளக்கியும் வெளக்காமயும், கொட்டாவி விட்டுகிட்டும், கொளம்பி குடிச்சிக்கிட்டும் ஒவ்வொர்த்தனா கான்பரன்சுல தூக்கத்தோட வந்து துக்கம் வெசாரிக்கிரானுவ. அவனவனுக்கும் சோகக்கத சொல்லி முடிக்கறதுக்கே மதியமாயிப்போச்சு. இதுக்குப் பேரு வேற வார் ரூமாமா! அடங்கொக்காமக்கா!
தெண்டத்துக்கு லாங் டிஸ்டன்ஸ் கால்ல நாலு மணிநேரம் உக்காந்துட்டு, சாப்பாட்டுக்கு நம்மூரு ஓட்டல் போனா, தட்டுக்கும் சப்பாத்திக்கும் வித்தியாசமே தெரியல, ரெண்டும் ஒக்கே திக்னெஸ்ல கிண்ணுன்னு நிக்கிது. அடேய்! சப்பாத்திடா அது! செய்ய வராட்டி வராட்டி செய்யாதீங்கடா! ஒரே நல்ல சமாசாரம், அந்த ஓட்டல்ல ஒரு ஜூப்பரு டிக்கிட்டு வேல பண்ணிக்கினு க்குது. ஆனா அது இந்திக்கார டிக்கிட்டு, நமக்கு ஒர்க் அவுட்டு ஆவாதே! அடங்கொக்காமக்கா!
சாப்பாடு முடிஞ்சு வீட்டுக்கு வந்தா இன்னா பண்றதுன்னே தெரியல. ஒரே எம்ப்டியா க்குது. எம்டிவில திருப்பி திருப்பி அதே பாட்டு. ஹெச்பிஓல அதே ஆன் டிமாண்டு லிஸ்ட்டு. பெஜ்ஜாரா இருந்துச்சு. என்னா எளவுடா இதுன்னு...இருந்தாப்ல இருந்து எதுவுமே பண்ண வேணாம்னு தோணும்ல, புஸ்தகம் படிக்க வேணாம், படம் பாக்கவேணாம், போன் பேசவேணாம், பிகரு வெட்டவேண்டாம்...அந்த மேரி. இப்பிடி இருக்க சொல்ல இன்னாத்த பண்ணுறது? அடங்கொக்காமக்கா!
அப்பிடியே ரெண்டு நாளு. இன்னிக்கி ஷாப்ரைட்டு ஜூப்பர்மார்க்கிட்டுக்குப் போயி சாப்பாட்டுக்கு உசார் பண்ணிகிட்டு கை நெறைய கவர் வெச்சிக்கினு அபார்ட்மெண்டு கேட்டு உள்ளார நொழஞ்சா எதுத்தாப்புல அந்தப் பொண்ணு. நா போன மாசம் என் தோஸ்து வீட்ல (ரெண்டு மாடி கீழ க்குது) இருக்க சொல்ல எதுத்த வீட்ல இருந்துச்சு. கவுரின்னு பேரு. இந்திக்கார டிக்கிட்டுதான். ஒரு நா அவுங்க வீட்ல பார்ட்டின்னு சொல்லி கேக்கு எடுத்தாந்து
குடுத்துது. நல்ல கேக்கு. அதுக்கப்புறமா இன்னிக்கி தான் பாக்குறேன். அப்பிடியே பாத்தும் பாக்காம நேரா போயி லிஃப்டு பட்டன் அழுத்த சொல்லதான் ஒறைக்குது. அடேய்! இன்னாடா இப்பிடி ஆயிட்ட! அடங்கொக்காமக்கா!
ஒரு மார்க்கமாத்தான் போய்ட்டு இருக்கு. இப்பிடீ இருக்க சொல்ல தான் இன்னிக்கு மெயில் பொட்டில ஒரு மெயிலு. தோஸ்து பாஸ்டன் பாலாஜிகிட்ட இருந்து. அடேடேடே! புளோக்கு க்குதுல்ல! நாலு வார்த்த எய்துனா இன்னா? அப்பிடின்னு தோணிச்சா, செரி, செய்ஞ்சிட்டேன். மத்தபடி, என் வலப்பூவுல என்னிக்கி உருப்படியா எழுதி இருக்கேன்? ஆகா! இவ்ளோ நேரம் இத்த வேற படிச்சிகினு இருந்தீங்களா? அடங்கொக்காமக்கா!
Labels: பொது
ப்ரியமுடன் நான் 9:22:00 PM | 28 பின்னூட்டங்கள்
|
Sunday, September 25, 2005
பிலடெல்பியா தெருக்கள்
ஒரு கையில் டிராபிகானாவும் இன்னொரு கையில் சைனா சிகரெட் லைட்டரும் வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்து சிம்மாசனத்தில் உட்காரும்போது சட்டென்று தோன்றியதே, அப்போதே எழுதியிருந்தால் சுவாரசியமான விஷயங்கள் சிலவற்றைச் சொல்லியிருக்கக்கூடும். ஆனாலும் பரவாயில்லை. இப்போதாவது எழுதித் தொலையலாம். தமிழ் மறந்த பாவம் செய்யுமளவுக்கு இன்னும் கெட்டுப்போய்விடவில்லை.
எதற்கு கையில் சிகரெட் லைட்டர் என்று கேட்கும், என் புனிதத்தன்மை தெரிந்த மக்களுக்கு, "ஸ்டைலுமா!". எதற்கு டிராபிகானா என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்பாடா! கற்றதும் பெற்றதும் சுஜாதா மாதிரியே ஒரு மேட்டரும் இல்லாமல் நான்கைந்து வரி பினாத்தியாகிவிட்டது. இனி அவரைப்போலவே ஒரு எபிசோடு முழுவதும் ஜல்லியடிக்க முயற்சி செய்தால் தர்ம அடி விழும் என்பது தெரிந்தே செய்வது கொழுப்பு.
பிலி எனப்படும் பிலடெல்பியாவில் கால் வைத்து ஒரு மாதமாகிவிட்டது. பெயரில்லாத புரட்சிக்காரருக்குத் தொலைபேசியது தவிர தமிழ் வலைப்பதிவுலகத்துடன் எந்தவொரு ஒட்டோ உறவோ இல்லாமல் முழுக்க முழுக்க வெரைசான்வாசியாகக் காலங்கழித்து, இன்றொரு உத்வேகத்தில் தமிழடித்துக்கொண்டிருக்கிறேன். 'அமெரிக்கா போகணுமா?' என்று யாரோ ஒரு புண்ணியவான் எழுதிய புத்தகத்தை மட்டுமே படித்து அமெரிக்காவுக்கு வெற்றிகரமாக வந்தாகிவிட்ட நிலையில் (வலைப்பதிவு விளம்பர உலகம் மிகவும் நூதனமான உத்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது), ஒரு பத்துப்பதினைந்து நாட்கள் சோற்றுக்குச் சிங்கியடித்ததில் ரைசின் ப்ரான், சப்வே வெஜ்ஜி பாட்டி, உறையவைத்த உணவுப்பண்டங்கள் என்று சகலமும் தோழமையாகியிருக்கிறது.
இட்லிசாம்பார், இடியாப்பத்திலிருந்து பருப்பு வடை, பரோட்டா வரை எல்லாம் உறைந்த நிலையில் குளிர்பதனப்பெட்டியில் குடியேறியிருக்கிறது. கூடவே பஞ்சபுட்டு கடலகறி, சுகியன், சம்மந்திப்பொடி என்று மலையாளத்துச் சாமான்களும் ஷ்ரிம்பு தோரன், ப்ரான் ஊறுகாய், சிக்கன் மசாலா, பீ·ப் பாட்டி என்று நடப்பன, ஊர்வன, பறப்பன எல்லாம் சமபந்தி போஜனத்துக்காக ஐக்கியமாகியிருக்கின்றன. அம்மா, அப்பா தவிர மற்ற அனைத்தும் உறையவைத்து கிடைக்கின்றன என்பதை அமெரிக்கா புத்தகத்தின் அடுத்த பதிப்பில் சேர்க்கச்சொல்லவேண்டும்.
அடாடா! சொல்ல மறந்துவிட்டேனே! மேற்சொன்ன வீச்ச வாடைகளுக்கெல்லாம் என் அறைத்தோழர்கள் பொறுப்பு. பிரவுன் ஒயின், பட்வைஸர், சிங்கிள் மால்ட் என்று மணக்கும் வஸ்துக்களுக்கும், மார்ல்பரோ இன்னபிற புகையும் வஸ்துக்களுக்கும்கூட. ஒன்பதாவது மாடியின் ஒய்யாரமான பால்கனியில் ஒரு சிம்மாசனமும் சிலபல அடியாசனங்களும் பின்மாலைப்பொழுதுகளில் நிரம்பும் தருணங்களில் கையில் லெமனேடு வைத்துக்கொண்டு சியர்ஸ் சொன்ன காமெடியெல்லாம் ஆயிற்று. மரியுவானா, சூஷி, ஆம்ஸ்டெர்டாம், லெபனீஸ் பெண்கள், ஜென்டில்மேன்ஸ் கிளப் என்று சுவாரசியமான விஷயங்கள் பேசும்போது சுருதி இல்லாமல் எப்படி?
அர்த்தராத்திரி நான்கு மணிக்கு (எங்கள் ஊர்ப்பக்கம் விடியற்காலை என்றும் சொல்வதுண்டு) இர்ரிவர்சிபிள் படத்தில் மோனிகா பெல்லூக்சி பற்றிப் பேசுவது கொஞ்சம் எக்குத்தப்பு என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்யமுடியும்? வில்லங்கமான சமாசாரங்கள் போக மீதி நேரத்தில் முழுக்க முழுக்க பெல் அட்லாண்டிக் டவர்ஸ் எனப்படும் எங்கள் அலுவலகக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் (இன்னொரு ஒன்பது!) பழியாகக் கிடப்பது. கடன்காரன் ஒரே நேரத்தில் ஒன்பது (இன்னொரு ஒன்பது!) தொலைபேசியில் பேசச் சொல்லும்போது ஒரு சூஷி மீன் எடுத்து அவனது வாயில் திணிக்கலாம் போல இருந்தாலும், வேலை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது.
பிலடெல்பியா மிக மிக அழகான நகரம். இரு பக்கக் கட்டுரை வரைக பாணியில் நான் சொல்லியிருந்தாலும், நிஜமாகவே மிக அழகான நகரம். இந்த நகரத்தைப் பற்றிக் கண்டிப்பாக நிறைய எழுதவேண்டும்.
Labels: பொது
ப்ரியமுடன் நான் 9:26:00 PM | 8 பின்னூட்டங்கள்
|
Wednesday, August 24, 2005
பிலடெல்பியா போன பில்லக்கா பையன்
வெட்டியா ஊர் பொறுக்கிக்கிட்டு இருந்தானாம் ஒரு பய. திடீர்னு ஒரு நா அவன் கிட்ட போயி "அடேஏஏய் வெட்டி ராசு! மெட்ராஸில பொறுக்குனது போதும், நீ போயி அம்பேரிக்காவுல பொறுக்குன்னு சொல்லி தெர்த்தி விட்டாய்ங்க. அதுனால, பய இப்ப ரெண்டு நாளா பிலடெல்பியாவுல திரிஞ்சிகிட்டு இருக்காம்னு ஊர்ல நாட்ல சொல்லிக்கிறாய்ங்க. முடிஞ்சா அவனுக்கு சொவடு சங்கரு அட்டு யாகூ டாட்டு காமுல ஒரு கொர்லு வுட்டுப் பாருங்க.
ப்ரியமுடன் நான் 10:12:00 PM | 5 பின்னூட்டங்கள்
|
Sunday, August 14, 2005
Mangal Pandey - Falling
மொழி அவ்வளவாகப் புரியாது. தெரிந்த நான்கைந்து சொற்பிரயோகங்கள் மூலம் குத்துமதிப்பாக வசனங்களைப் புரிந்துகொண்டுதான் இந்திப் படங்கள் பார்ப்பது வழக்கம். இப்பொழுது வருகிற முக்காலே மூன்று வீசம் இந்திப்படங்களுக்கு வசங்கள் புரிந்துகொள்ளலெல்லாம் தேவையேயில்லை என்பதால் இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரிவதில்லை (அர்த்தங்கள் 'அவிழ்ந்து'கொண்டு வெளிவருவதால் மொழி ஒரு அவசியமன்று என்பதறிக). ஆனால், மொழி முழுவதுமாகப் புரியாத படங்கள் பற்றிக் கருத்து சொல்வதில்லை என்று வைத்திருந்தேன். இப்படித்தான் 'மொஹப்பத்தேன்' என்று ஒரு படத்தைப் பாஆஆஆர்த்து முடித்தபின் மகாபாரதம் என்று சொல்லப்போய் சில இந்திக்காரப் பையன்கள் என்னை அடிக்கவராத குறை. வசனம் அற்புதமாக இருந்ததாம். நான் கண்டேனா?
சரி மேட்டருக்கு வருவோம். இன்று மேற்படி படத்தை மெலடி தியேட்டரில் நூறு ரூபாய் டிக்கெட் மட்டுமல்லாது இருபத்தைந்து ரூபாய்க்கு கார்பன்டையாக்சைடு பானமும் வெண்ணையில்லாத பட்டர் பாப்கானும் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஏதோ விசேஷ ஆ·பரில் பார்த்தேனா, எதுவும் எழுதாமற்போக முடியவில்லை.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நானெல்லாம் ஆமிர் கானின் கடினமாகச் செத்துப்போன விசிறி. அதனால் அவரைக் குறை சொல்வேனென்று எதிர்பார்க்காதீர்கள். முறுக்கு மீசையும் மிடுக்குத் தோற்றமுமாகத் தலைவர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மீசையை முறுக்கும் ஒரு சீனில் தியேட்டரில் விசில் அடிபறக்கிறது. பெயர் போடும்போதே நம்மூர் மக்கள் இரண்டே விஷயங்களுக்குத் தான் மகா ஜவுண்டு விடுகிறார்கள். ஒன்று ஆமீர், இன்னொன்று ரஹ்மான். முன்னவர் ஓக்கே. பின்னவரைக் கட்டி வைத்து உதைக்கலாம்.
மங்கல் பாண்டே யார்? அவன் செய்தது சிப்பாய்க் கலகமா அல்லது முதல் இந்திய சுதந்தரப்போரா? விகடனில் இதைப்பற்றி ஏற்கனவே ஞானி ஓ போட்டாயிற்று. ஞானியின் கூற்றுப்படி சும்மா 'பாங்க்' குடித்துவிட்டு ஒரு கிக்கில் மங்கல் சவுண்டு விட்டதுதான் சிப்பாய்க்கலகம் என்று ஒரு கருத்து தயாராகிவிட்டது (ஞானி உதைக்கப்போகிறார். அவர் பன்றி(?)க் கொழுப்பு கார்ட்ரிட்ஜ் பற்றியெல்லாம் சொல்லித்தான் இருக்கிறார். இருந்தாலும் இப்போதெல்லாம் கருத்துக்களை இப்படிச் சுருக்கிச் சொன்னால்தான் summarizing). அதற்கு அவர் கூறும் ராணுவ ஆவணங்கள் எவை என்பது தெரியாததாலும் அவை பிரிட்டிஷாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதாலும் அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொள்ள முடியுமா தெரியவில்லை. படத்தைப் பார்த்தே இந்தக் கேள்விக்குப் பதில் பெறலாம் என்று நினைத்தால் படத்திலும் இதையே விஸ்தாரமாகக் காட்டிவிட்டு 'பாரடா தேசபத்தி'யென்று சொல்லும்போது குழப்பமே எஞ்சுகிறது.
படத்தின்படி மங்கல் பாண்டே ஒரு சிப்பாய். வெள்ளைக்காரர்களுக்கு மிகவும் விசுவாசமானவன். வெள்ளைக்கார கேப்டனுக்கு தோஸ்தோ தோஸ்து. அவ்வப்போது அவனது கண்முன்னால் இந்தியச் சகோதரன் யாராவது உதைக்கப்பட்டால் மாத்திரம் கொஞ்சம் ·பீலாகிறான். மற்றபடி, அவனுக்கு வெள்ளையர் ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. வெள்ளைக்காரர்களை எதிர்க்க ஒரே முகாந்திரம் துப்பாக்கிகளுக்கான புதிய கார்ட்ரிட்ஜ் மூலம் வருகிறது. இந்தக் கார்ட்ரிட்ஜ்ஜில் மாட்டுக்கொழுப்பாலான கிரீஸ் தடவப்பட்டிருக்கிறது. இந்தக் கார்ட்ரிட்ஜை வாயில் வைத்துக் கடித்து அதிலிருந்து ரவையை எடுக்கவேண்டும். இது பசுவைத் தெய்வமாக மதிக்கும் அவனது மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. எனவே அதை எதிர்க்கிறான். இதிலே எங்கே ஐயா தேசபத்தி வந்தது?
கார்ட்ரிட்ஜ்ஜுக்காகச் சண்டையெல்லாம் போட்டுவிட்டுத் திடீரென்று கார்ட்ரிட்ஜ், மாடெல்லாம் சும்மா புருடா, நான் 'ஆஸாதி'க்காகத்தான் போராடுகிறேன், 'ஆஸாதி' வந்துவிட்டால் ஆயிரம் கார்ட்ரிட்ஜ்களைக் கூட நான் கடிக்கத் தயார் என்று வீரவசனம் பேசும்போதுதான் உதைக்கிறது. கார்ட்ரிட்ஜ் பிரச்னை வருவதற்கு முன்னால் எங்கே போனது இந்த சுதந்தர தாகம்?
சரி, கிடக்கிறது கெரகம், தேசபத்தியை விட்டுவிடுவோம். 'சதி' பெயரில் ஒரு விதவைப்பெண்ணை உடன்கட்டை ஏற்றும் ஒரு கட்டத்தில் மங்கலின் நண்பனான கேப்டன் இதைக் காணச்சகியாமல் வெகுண்டெழுகிறான். அப்போதும்கூட மங்கலுக்கு அது பிரச்னையாகத் தோன்றவில்லை. தயங்குகிறான். கேப்டன் சொல்லித் தான் மங்கலுக்கு உறைக்கிறது. விதவைப் பெண்ணைக் காப்பாற்றப் போன கேப்டன் உயிருக்கு ஆபத்து என்னும்போதுதான் மங்கல் குருதை மேலேறி கத்தியைச் சுழற்றிப் புகுந்து புறப்படுகிறான். ஆக, தேசபத்தியும் கிடையாது, முற்போக்குச் சிந்தனையோ சமுதாய அக்கறையோ கூடக் கிடையாது. அப்படியென்றால் என்ன dash-க்கு மங்கல் பாண்டேவைப் பார்த்து வாய் பிளக்கவேண்டும்?
நான் இதுவரை சொன்னது படம் பார்த்து நான் புரிந்துகொண்டதுதான். சத்தியமாக மங்கல் பாண்டேக்கும் எனக்கும் எந்தவிதப் பூர்வஜென்மப் பகையும் கிடையாது. தேசபத்தியாளர்கள் வெகுண்டெழவேண்டாம். நிஜமாகவே மங்கல் பாண்டே சுதந்தரப் போர் வீரனாக இருப்பின் அவனுக்கு எனது ராயல் சலூட். ஆனால் படத்தின்மூலம் அதெல்லாம் வெளிப்படவே இல்லை என்பதுதான் சோகம்.
படம் மனதில் ஒட்டவே இல்லை. கையை காலை நீட்டிக்கொண்டு, நெட்டி முறித்துக்கொண்டு படத்தைப் பார்த்து முடிக்கும்போது 'லகான்' நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. லகானில் ஆயிரத்தெட்டு பிரச்னை சொல்லலாம். ஆனால், படம் ஓடிய மூன்று மணிநேரத்தில் எங்காவது தொய்வு என்று கண்டதுண்டா? அந்த அம்சத்திலும் இந்தப் படம் கோட்டை விடுகிறது. புதிய உத்திகளோ புதுமாதிரி சீன்களோகூட இல்லை. எல்லாம் cliched காட்சிகள்.
படத்தில் ரெண்டு ஹீரோயினிகள். ராணி முகர்ஜி, அமீஷா படேல். ராணி கிழடுதட்டிய முகம். பார்க்கப் பரிதாபமாக இருக்கிறார். வெறும் குரலில் மட்டும்தான் மயில். அமீஷா இன்னும் பாவம். அவர் திரையில் வரும் நேரத்தை நொடிக்கணக்கில் எண்ணிவிடலாம். ராணிக்கும் அ·தே. ராணிக்காவது ஒரு முழுப்பாட்டு. அமீஷாவுக்கு ஒரு பாட்டில் துளியூண்டு மேட்டர் சீனோடு சரி. உச்சபட்ச காமெடியாக மங்கல் சிறையில் மறுநாள் தூக்கிற்காகக் காத்திருக்கும்போது ராணி முகர்ஜி அவரை வந்து பார்க்கிறார். கையில் என்னடாவென்று பார்த்தால் குங்குமச் சிமிழ்! பேக் கிரவுண்டில் மீஜிக் பறக்க நெற்றியில் பொட்டு வைத்து ஆரத்தியெல்லாம் எடுத்தாகிறது. லாஸ்டு நிமிட் கல்யாணமாம்! மனுசனுக்கு ரெண்டு தோசையோ மூணு இட்லியோ எடுத்து வந்திருந்தாலாவது நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு சாவுற காலத்துல என் பெயரை உச்சரித்துக் கொண்டே செத்துப்போயிருப்பான். அதற்கும் மங்கல் கொடுத்துவைத்திருக்கவில்லை.
நல்ல விஷயங்கள் என்று பார்த்தால் செட்டெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் இதேபோன்ற கிராமங்களை லகானில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் புதிதாக ஒன்றுமில்லை. வெள்ளைக்கார கேப்டனாக டோபி ஸ்டீவன்ஸ் நன்றாக நடித்திருக்கிறார். தாந்தியா தோபே, பஹதூர் ஷா, நானா சாஹெப், ஜான்ஸி ராணி லஷ்மி பாய் என்று எட்டாப்பு சரித்திரப் புத்தகத்தில் படித்த பெயர்களெல்லாம் நினைவூட்டுகிறார்கள். ஜான்ஸி ராணி சேப்பு லிப்ஸ்டிக்கோடு 'கும்' மேக்கப்பில் வரும் ஒரு ·ப்ரேம் சூப்பரோ சூப்பர். சிப்பாய்க் கலகம் ஒழுங்காக நடந்திருந்தால் கிழக்கிந்தியக் கம்பெனி என்ன அளவுக்கு உண்டை வாங்கியிருக்கும் என்பதை அழகாக உணரவைக்கிறார்கள்.
ஆமீர் கானுக்கு தீனி குறைவு. கிடைத்த கேப்பில் ஒழுங்காகச் செய்திருக்கிறார். ஆனாலும் லகான், தில் சாஹ்தா ஹே போன்ற படங்களுக்குப் பிறகு இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற படம் இப்படிச் சாதாரணமாக இருந்திருக்க வேண்டாம்.
பாட்டெல்லாம் சுமார் ரகம், ஒரே மாதிரி. ஆஊவென்றால் அலறிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். அடிக்கடி ஐந்து ஜந்துக்கள் ஒரு யானை மேலேறி மங்கலு மங்கலு செங்கலு செங்கலு என்று பாடிப் படுத்துகிறார்கள். ரஹ்மானுக்கு என்ன ஆயிற்று? காசு பெயரவில்லையா அல்லது பகலில் வேலை செய்யச் சொன்னார்களா தெரியவில்லை.
அண்டா அண்டாவாகச் சோமபானம் குடிப்பார்கள். விவகாரமான கெட்ட ஆட்டங்கள் பார்த்து ரசிப்பார்கள். விதவைப்பெண்ணை உயிரோடு கொளுத்துவார்கள். ஆனால் மாட்டுக் கொழுப்பு தடவிய கார்ட்ரிட்ஜ் மட்டும் பல்லில் பட்டால் மகாபாவம். இதுதான் அந்தக் காலகட்டத்தின் நிதர்சனம் என்றால் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டுவது என்ன என்பது புரியவில்லை.
நமது வலைப்பதிவாளர்களுக்கு எழுதத் தீனி போடும் விஷயங்கள் சில படத்தில் உள்ளன. அவற்றையும் போகிறபோக்கில் சொல்லி நாளை கமெண்டுப் பொட்டியில் உண்டக்கட்டி வாங்க வழிசெய்துவிடுகிறேன். ஆமீர் கானின் திருமேனியில் சீனுக்கு சீன் பூணூல் பொலிகிறது. தோளில் துண்டு போட்டிருந்தால்கூட துண்டின்மேல்தான் பூணூல் இருக்கிறது. ஆமீர் கான் அவ்வப்போது தெரு கூட்டிப்பெருக்கும் கீழ்சாதிக்காரனை திட்டுகிறார், அடிக்கிறார்.(அடி பின்னுங்க மக்களே!)
ஆமீர் கானுக்கு இப்படி ஒரு படமா என்று வருத்தப்பட்டு சாயங்காலமே 'தில் சாஹ்தா ஹே' ஒரு ரவுண்டு பார்த்தேன். இப்பொழுது நிம்மதியாகத் தூக்கம் வரும்.
******
சம்மந்தமில்லாத ஒரு குறிப்பு. தனிப்பதிவு எழுதுமளவுக்கு நீளமும் சரக்கும் இல்லாததால் பாப்புலாரிட்டி வால்யூ கருதி (பதினைந்து நிமிடப் புகழ் கருதி என்றும் படிக்கலாம்) இதோ:
சுஜாதாத்தாவுக்கு வயது ஏறிக்கொண்டே போவதால் இப்போதெல்லாம் கருத்துக்களை விட வயதுதான் அவருக்கு முக்கியமாகத் தெரிகிறது. பாருங்களேன்: "...ழான் பால் ஸார்ட் பற்றி நான் எழுதியதில் பல தவறுகள் இருப்பதாக ஒரு பேராசிரியர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். வழக்கம் போல இது பற்றி வலைப்பதிவுகளிலும் சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருப்பதாக தேசிகன் சொன்னார். பேராசிரியரின் வயதுக்கு (77) மதிப்பளித்து, அவருக்கு மட்டும் பதிலளித்தேன்." இது விகடனிலிருந்து.
கற்றதும் பெற்றதும் படிக்கும் தாத்தாக்கள் எல்லோரும் இனி சுஜாதாவுக்குக் கடிதம் எழுதலாம். "அடேய்! பக்கெட் சாம்பாரி"ல் ஆரம்பித்து "ராயப்பேட்டை பாலு" கவிதைகள் வரை எது வேண்டுமானாலும் எழுத அனுமதியுண்டு. அவரவர் வயது சீனியாரிட்டிப் படி தனிமடலில் பதிலளிக்கப்படும். அவ்வப்போது சுஜாதா மனம் கவர்ந்த கடிதங்களை எழுதிய புண்ணியவான்கள் பெயரும் ஊரும் பட்டியலிடப்படும் (ஆகா! அது குமுதமாச்சே! அப்பப்ப கன்பியூஸ் ஆயிடுறேன்!).
Labels: திரைவிமர்சனம், பொது
ப்ரியமுடன் நான் 2:31:00 PM | 11 பின்னூட்டங்கள்
|
Monday, June 20, 2005
அமெரிக்கா புத்தகம் வாங்குவது குறித்த மேலதிக விவரங்கள்
புத்தகம் தமிழகத்தில் அனைத்து பிரபல புத்தகக்கடைகளிலும் கிடைக்கும் என்று பதிப்பகம் தெரிவிக்கிறது. இணையம் மூலம் பெற விரும்புவோர் காமதேனு.காம் செல்லுங்கள்.
புத்தகத்தின் விலை ரூ. 60/-
பதிப்பக முகவரி:
கிழக்கு பதிப்பகம்,
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை - 600004.
தொலைபேசி: 52009601/03/04
இணையத்தளம்: http://www.kamadenu.com
Labels: பொது
ப்ரியமுடன் நான் 3:48:00 AM | 6 பின்னூட்டங்கள்
|
Saturday, June 18, 2005
என் முதல் நூல் - அமெரிக்கா போகணுமா

கேள்வி:
நேற்று மாலை ஏழு மணிக்கும் இன்னபிற பொதுவான மாலை ஏழு மணிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கி, மேற்கோள் காட்டிக் குறிப்பு வரைக.
பதில்:
பத்ரியிடமிருந்து நேற்று மாலை வந்த தொலைபேசி அழைப்புக்காகக் கொஞ்ச நாளாகவே காத்திருந்தாலும் அது வந்த தருணத்தில் கைகால்கள் பரபரக்க, மூன்று சக்கரத் தேரேறிக் கிழக்குப் பதிப்பகத்திற்கு வாயுவேக மனோவேகமாகப் பறந்து போய் அந்தக் கட்டு புத்தகங்களை வாஞ்சையுடன் நோக்கிய நேற்று மாலை ஏழு மணி என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு மறக்க முடியாத தருணம்.
ஆம் நண்பர்களே! குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாராகப் போன கதையாக இத்தனை காலம் வலைப்பதிவுகளில் அடித்துக்கிளப்பிக்கொண்டிருந்துவிட்டு இப்போது நான் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட ஒரு புத்தகம் வந்திருக்கிறது. விளையாட்டு நிஜமாகவே வினையாக, செயலாக உருவெடுத்திருப்பதில் கிறுகிறுத்து அலைந்துகொண்டிருக்கிறேன். 'அமெரிக்கா போகணுமா' என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் புதிதாக ஏதும் சொல்வதை விட, இந்தப் புத்தகத்திலிருக்கும் முன்னுரையையே இங்கே தருவது உசிதம் என்று கருதுகிறேன்.
புத்தகத்தின் முன்னுரை:
உள்ளே புகுமுன் ஒரு நிமிடம்
நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பேர், எத்தனை எத்தனை காரணங்களுக்காக அமெரிக்கா போகின்றனர் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. படிப்பிற்காக, வேலைக்காக, உயர்கல்விக்காக, பொழுதுபோக்கிற்காக, மருத்துவத் தேவைகளுக்காக, வியாபார நிமித்தமாக, அரசியல் காரணங்களுக்காக, கலை வளர்ப்பதற்காக, கல்யாணம் செய்துகொண்டதற்காக, பிள்ளைகள் அங்கே இருப்பதற்காக, பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இவர்கள்தான் எத்தனை எத்தனை விதமானவர்கள்! முருகப்பெருமான் கணக்காக உலகம் சுற்றும் வாலிபர்களிலிருந்து முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு தவிர வேறு உலகம் அறியாத பிராணிகள் வரை எத்தனை பேருக்கு அமெரிக்கா செல்லும் தேவை வந்துவிடுகிறது!
அமெரிக்கா போவதென்று முடிவு செய்வதற்கும் அமெரிக்கா போவதற்கும் இடையேதான் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன! சும்மா பயணச்சீட்டு வாங்கி பஸ் ஏறுவது போலல்லவே இது. அனுமதிகள், விதிமுறைகள், விளக்கங்கள், விண்ணப்பங்கள் என்று ஒரு பெரிய பட்டியல். பாஸ்போர்ட் என்றால் என்ன என்பதிலிருந்து நமக்கு எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னொரு பெரிய பட்டியல். இப்படி, அடிப்படை ஆயத்தங்கள் முதல் கட்டம்.
அதன்பிறகு, எவ்வளவு மூட்டை எடுத்துச்செல்லலாம் என்பதிலிருந்து ஏர்போர்ட்டில் என்னென்ன செய்யவேண்டும் என்பது வரை அமெரிக்கா கிளம்பும் முஸ்தீபுகள் இரண்டாம் கட்டம்.
அமெரிக்காவில் ஆஜரான பிறகு, நாடு நகரம், ஊர் ஜனங்கள், தட்பவெப்பம், சட்டதிட்டம் என்று அமெரிக்கா நமக்கு அறிமுகமாகும் கதை மூன்றாம் கட்டம்.
அறிமுகமில்லாத பிரதேசத்தில் முற்றிலும் புதிய சூழ்நிலையில் தங்குவதற்கு வீடு, போக்குவரத்து, சாப்பாடு, தொலைபேசி, வங்கிக்கணக்கு, லைசென்ஸ், வரி, ஷாப்பிங், ஊருக்குப் பணம் அனுப்ப என்று வரிசை கட்டி நிற்கும் சமாசாரங்கள் நான்காம் கட்டம்.
இதுதவிர, படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விரும்புபவர்களுக்கு என்ன படிப்பு, என்ன கல்லூரி, என்னென்ன தகுதித்தேர்வுகள், எப்படி விண்ணப்பிப்பது என்று நிறைய இருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் கேள்விகள், கேள்விகள். கனவுகளுடன் கூடவே கலர் கலராக சந்தேகங்கள். இந்த சந்தேகங்கள் ஒவ்வொன்றையும் கையிலெடுத்து ஜாலியாக விடை சொல்லிக்கொண்டே போகும் முயற்சிதான் உங்கள் கைகளில் அமர்ந்திருப்பது.
கல்லில் செதுக்கியது போய், துணியில் தீட்டியது போய், காகிதத்தில் கிறுக்கியது போய், அச்சில் அழுத்தியது போய் இன்று இணையத்தில் இறங்கியிருக்கிறது தமிழ். இணையத்தில் தமிழ் எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் சில நூற்றுக்கணக்கான ஆர்வலர்களில் ஒருவன் நான்.
என்னைப் போன்றதொரு ஜந்து கூட புத்தகமெல்லாம் எழுதமுடியும் என்று நம்பிய/நம்பிக்கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய பா. ராகவன் மற்றும் பத்ரி சேஷாத்ரி அவர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன்.
அன்புடன்,
ஷங்கர்.
Labels: பொது
ப்ரியமுடன் நான் 3:51:00 AM | 42 பின்னூட்டங்கள்
|
Wednesday, June 08, 2005
...
புத்தக விளையாட்டு கனஜோராகப் போய்க்கொண்டிருக்கிறது. சுவாரசியமான ஒரு மனப்போக்கு தென்படுகிறது. கொஞ்ச நாள் முன்னர் புத்தக வாசம் என்று ஒன்று எக்கச்சக்கமான பேர் வரவேற்பளிக்க அமர்க்களமாகத் தொடங்கியது. ஆனால் அது நிற்கமுடியவில்லை. புத்தகங்கள்தான் என்றாலும் அவற்றைப் பட்டியலிட்டு சிறுகுறிப்பு வரைவதோடு போதும் என்று மக்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. முழுமையான ஒரு விவாதத்தில் பங்குபெற யாருக்கும் விருப்பமோ பொறுமையோ இல்லையோ?
டிஸ்க்ளைமர்: புத்தகவாசத்தின் தற்போதைய நிலைமை என்னவென்று எனக்குச் சத்தியமாகத் தெரியாது. கண்ணில் படவில்லை, மதியின் வலைப்பதிவில் சுட்டியில்லை என்பதை வைத்துக் கொண்டு அது மூடப்பட்டுவிட்டதாக அனுமானிக்கிறேன். மற்றபடி, அது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பட்சத்தில் அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். (சுட்டியும் கொடுங்களேன் :)) இதில் ஏதாவது அரசியல் புகுந்திருந்தால் "ஆளை வுட்ரா சாமீ".
***
நுழைவுத்தேர்வு குறித்து பல சுவாரசியமான பதிவுகள் வந்திருக்கின்றன. சுதர்சனின் பதிவு, மற்றும் அதன்பிறகு வந்த பதிவுகள் பல்வேறு முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றன. எனது நிறுவன நண்பர்களுடனும் இரண்டு நாட்களாக இதுகுறித்து விவாதித்து வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த மனநிலையில் சற்று மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட euphoric ஆக எழுதியிருந்த பதிவிற்குப் பின் என் சிறுபுத்திக்கு எட்டாத பல அவசியமான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஒரு மீள்பார்வை அவசியமாகிறது.
இணையத்தில் பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்கள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கும் பலரும் இம்முறை மவுனம் சாதித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். தெளிவான கருத்துக்களும் முடிபுகளும் வைத்திருக்கிறோம். 'நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய ஒரு கல்விக்கொள்கை' என்று ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு நாம் ஏன் ஒரு பரிந்துரை தயார் செய்யக்கூடாது?
யாருக்கும் கொடுப்பதற்காக இல்லையென்றாலும், கேள்விகள் எழுப்பும் நேரத்தில் அவற்றிற்குப் பதிலளிக்க முனைந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முயற்சியாக இதைச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. நானெல்லாம் இதுபோன்ற விஷயங்களில் மேலோட்டமான கருத்துக்களைச் சொல்வது தவிர இதுவரை உருப்படியாக எதுவும் யோசித்துப் பார்த்தது கிடையாது. இப்போதாவது சிந்திக்கக் கற்றுக்கொள்ளலாமே என்று நினைக்கிறேன்.
***
Labels: பொது
ப்ரியமுடன் நான் 11:30:00 AM | 2 பின்னூட்டங்கள்
|
